Thursday, March 5, 2009

பதில் சொல்வது எப்படி?

அது ஒரு இனிமையான... இல்ல ஒரு இக்கட்டானா... இல்ல இல்ல பொன் மா... இல்ல.. இல்ல.. ஒரு சோதனையா.... வேண்டாம், வேண்டாம், இப்ப வேண்டாம், முடிஞ்ச உடனே முடிவு பண்ணுவோம்.

வீட்டுக்குள்ளே நுழைஞ்சும், நுழையாம இருக்கும் போதே...

"இன்னிக்கி நான் அல்வா கிண்டி வச்சிருக்கேன் நீங்க சாப்டு பார்த்துட்டு சொல்லுங்க"

"சரீ.... கை கால் முகம் கழுவிட்டு வறே...ன், டேபிள்லே வைய்யி...."

"ஹா....ன், நல்லா இருக்கே..........! எதை? எதை...? பார்த்து செஞ்சே"

"ஏன்...? எங்களுக்கெல்லாம் தன்னாலே செய்ய தெரியாதோ? எதையாவது பார்த்து... இல்லை யாரவது சொல்லி கொடுத்தா தான் தெரியுமோ?"

"___________"

"இல்லே... நேற்று காலையிலே கொண்டுவந்து போட்டீங்களே அந்த பழைய பேப்பர் கட்டு, அதுலே ஒரு பேப்பர்லே இருந்துச்சு, அதிலே கொடுத்திருந்தாங்க அதை பார்த்து செஞ்சேன். உங்களுக்கு பிடிக்குமே என்று...."

" அப்படியா...! நல்லா இருக்கே... பஸ்டு செஞ்ச மாதிரியே இல்லை"

"சும்மா.... எனக்காக சொல்ல கூடாது.... உண்மையிலே எப்படி இருக்கு...?"

"உண்மையிலே நல்ல இருக்குப்பா... நான் ஏன் பொய் சொல்லணும்?"

"சும்மா... சும்மா எனக்காக சொல்லாதீங்க? உண்மைலே சொல்லுங்க"

"இன்னும் கொஞ்சம் பதமா, மெல்லுஸ இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்... இப்ப கொஞ்சம் சுமாரா இருக்கு"

" அப்படில்லாம் சொல்லாதீங்க... நான் இதை செய்யவே எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமா?..... அடச்சே... இந்த ஆம்பிளைங்களே இப்படி தான், கஷ்டபட்டு செஞ்சி கொடுத்தா இப்படி தான் குத்தம் சொல்லிகிட்டே இருப்பாங்க... ஹ்ஹும்..."

" __ # * $* $* # ____ "


* * * * * *

Monday, January 19, 2009

அறம் செய விரும்பு

அறம் செய்ய விரும்பு - ஒளவையார்.

தமிழின் முதல் எழுத்து 'அ'. அந்த 'அ' விற்கு முதல் பதமாய் அம்மாவை தவிர்த்து, எனக்கு மட்டும் அல்ல அனைத்துலக தமிழ் சமுதாயத்திற்கும் 'அறம்' என போதிக்கிறது தமிழ். இதன்மூலம் அறத்திற்கு, தமிழ் வழங்கும் சிறப்பிடம் தெரிகிறது. இந்த கிளவியை தமிழுக்கு வழங்கிய கிழவி ஒளவையார். அந்த கிழவியை தமிழ் உலகிற்கு வழங்கிய கன்னித் தமிழ் அன்னையை போற்றி வணங்குகிறேன்.

அறம் செய்ய விரும்பு - எனக்கு என்றில்லாமல் நாம் அனைவருக்கும் படிக்கும் போது அனைவருக்கும் போதிக்கப்பட்ட ஒன்று, இந்த வாசகம். இரண்டு கோடு போட்ட நோட்டில் அழுத்தம் திருத்தமாக எழுதிப் பழகி நாம் கற்று கொண்ட இந்த வாசகம். இன்றும் இந்த வாசகம் சொல்லி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சிறு வயதில் சொல்லி கொடுத்தார்கள். அறம் செய்ய விரும்பு என்று.

இந்த அறம் என்றால் என்ன? என்று நாம் ஆராய போனால் நம்மால் இப்போது மீண்டு வர முடியாது. அதனாலேயே அப்போதைக்கு அறம் என்றால் நல்ல செயல்கள், கருமங்கள் ( கருமம், கருமம்...என்று யாரும் தலையில் அடித்து கொள்ள வேண்டாம் ) என்று சொல்லி. நாம் பிறருக்கு உதவ வேண்டும் என்று நம் சின்ன அறிவுக்கு புரிகிற மாதிரி சொல்லி ஒப்பேற்றி விட்டார்கள்.

அறம் என்றால் பிச்சை போடுவதா? இல்லை தன்னால் உண்ண முடியாத பழங்கஞ்சியை வறியவனுக்கு கொடுத்து பசி ஆற்றுவதா? இல்லை என்பது என் கருத்து. பின்னே அறம் என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பொறுப்பு, பணி, வேலை , கடமை இருக்கும் அதனை தான் மனசாட்சிக்கு பயந்து நீதியுடனும், நேர்மையுடனும் செய்வதே அறம் ஆகும். இது சாதாரண ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, நல்ல, வல்ல அரசுக்கும் பொருந்தும்

என்ன? நான் சொல்வது சரிதானே?

நன்றி

மீண்டும் வருக...

மீண்டும் வருவேன்.

Tuesday, January 13, 2009

தமிழ் நெஞ்சங்களுக்கு.......

அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு.......

எனக்கு ரொம்ப நல்ல வார்த்தைகளை வார்த்து, தைத்து, தமிழ் பட்டாக நெய்ய தெரியாது. இருப்பினும் எனக்கு தெரிந்த மாதிரி எழுதி கொண்டு இருக்கிறேன். கவிதையாக எழுதலாம் என்றால், " பாவம், தமிழ்" என்ற எண்ணம் இல்லை, எனக்கு. ஏன்? என்றால், தமிழ் எனது அன்னை. நான் எது செய்தாலும் என்னை பொறுப்பாள். ஆனால் அவள் வைத்த கோரிக்கை வேறு, " என் மக்களை ஒன்றும் செய்து விடாதே" என்றாள். அதனாலேயே கவிதை எழுதும் முயற்சியை விட்டு சாதாரணமாய் சொல்கிறேன்.

" உலக மக்கள் மனமெங்கும், இல்லந்தோறும், மகிழ்ச்சி பொங்கட்டும், ஆனந்தம் நிறையட்டும், செல்வம் சேரட்டும், ஆரோக்கியம் அமையட்டும் இந்த புத்தாண்டு முழுவதும்.....

எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்"


நன்றி

மீண்டும் வருக...

மீண்டும் வருவேன்.

Tuesday, January 6, 2009

இது தாண்டா உலகம்... !...?

வணக்கமுங்க,

நமது உலகம் ஆள், உருவம், தோற்றம், வடிவு, உடை, ஆபரணம், பகட்டு மற்றும் பொலிவிற்கு கொடுக்கும் மரியாதையை சாதாரண மனிதனுக்கு கொடுப்பதில்லை. என்று இந்த உலகம் மனிதனை மனிதனாக பார்க்க போகிறது, அவன் தரித்துள்ள போலி வேடங்களை கலைந்து. எதில் நாம் வேறுபட்டு இருந்தாலும் இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். நமக்கு இதில் அறிவோ, அறிவுரையோ இல்லை என்றோ, கம்மி என்றோ, சொல்லாதீர்கள். அதிலும் நம் தமிழ்ச் சமூகத்திற்கு மிக அதிகம்; அறிவும், அறிவுரைகளும்.

உலகப் பொதுமறையாம் வள்ளுவம் ஒதுகிறது.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.


அதாகப்பட்டது, உருவத்தை வைத்து நாம் யாரையும் ஏளனமாக பார்க்க கூடாது. இந்த இடத்தை நாம் உற்று நோக்கினால் ஒன்று புலப்படுகிறது அதுவும் தெளிவாகவே புலப்படுகிறது, உருவத்தை பார்த்து கேவலமாக எண்ணக் கூடாது என்றே சொல்கிறது. நீ உயர்வாய்க் கூட நினைத்துக் கொள் மோசமில்லை, ஆனால் துச்சமாக எண்ணாதே என்கிறார் வள்ளுவம் தந்த ஆசான். இதற்கு உவமையாய் கூறுகிறார், எவ்வளவு பெரிய தேராக இருந்தாலும் அதற்கு உருண்டு நகர் வலம் போக அளவில் சிறிதான, அழகு செய்ய தேவை இல்லாத, எப்போதும் இரும்பின்துகளையும் எண்ணையையும் கொண்ட கருமையான மையில் உழலும் அச்சாணி வேண்டும் என்று

இதை உணர்த்தும் விதமாக பல கதைகள் நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இன்று அதை நான் நேரிலே காணும் பாக்கியம் பெற்றேன்.

எங்கள் அலுவலகத்திற்கு மிக அருகில் ஒரு பெட்டிக் கடை உண்டு. பிளாக் படித்து, எழுதி, ஆணி பிடுங்கி, அடித்து, மேலாளரிடம் வசவு வாங்கி "வொய் பிலட்?", "சேம் பிலட்?" என்று கிண்டல் செய்து கவலை மறக்கும் இடம் ஆகும் அது. அங்கு ஒரு பெரியவர் அழுக்கான உடை உடுத்தி, பார்க்கவே மிக அருவெறுப்பான தோற்றத்தில் வந்து இருந்தார். அவரை பார்த்த உடனேயே கடைக்காரார் அவரை விரட்டும் முகமாக." தூர போ.. தூர போ..தூர போ.." என்று விரட்டினார். இன்னும் சில பேரு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவரை சரியாக கண்ட சிலபேரு "ஹேய்.. அவரு கடைக்கு சாமான் வாங்க வந்து உள்ளார்" என்று எடுத்து சொன்னார்கள். அவரும் கையில் உள்ள சில சில்லறைகளை கொடுத்து, ஒரு சாக்லேட் வாங்கி சாப்பிட்டு சென்றார்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு இளைஞன், மிக நேர்த்தியாக உடை அணிந்து மதக்குறிகள்லாம் இட்டு சில சிறிய விக்கிரகங்களை ஒரு தட்டில் வைத்து, ஒரு நன்கொடை புத்தகமும் வைத்து யாசித்து கொண்டிருந்தான். யாசித்து கொண்டே கடைக்கும் வந்தான். யாரும் அவனை ஒன்றும் சொல்லவில்லை. கடைக்காரரும் ஒன்றும் கொடுக்கவில்லை, அவனிடம் அதிகம் பேசாமல் அவனை அனுப்பி வைத்தார்.

அப்போ எனக்கு அந்த பெரியவரே கை எடுத்து கும்பிட தகுதியான, எனக்கு வாழ்க்கையை போதித்த கடவுளாக தெரிந்தார். ஆனால் அந்த இளைஞனின் தட்டில் உள்ள விக்கிரகங்கள் எல்லாம், நம்மை ஏமாற்றி நம் மீது ஏறிய அவன் வைத்து இருந்த கற்க் குவியலாகவே...

நன்றி.

மீண்டும் வருக,

நானும் வருவேன்...

Monday, January 5, 2009

எல்லாருக்குமே இப்படி தானா...?

வணக்கமுங்க,

நானும் இந்த வலை உலகத்தில் எனது சேவையை செஞ்சி, தமில வளர்க்களாம்னு பார்த்தா, அடப்பாவமே...! எதை பார்த்தாலும் பதிவாகவே தெரியுது, ஆனா ஆக்கமா ஒரு பதிவும் தேற மாட்டேங்குதே...!

பல்லுப் போன கிழவிலே இருந்து "தில்லு" காட்டுர அழகி வரைக்கும், இது தினத்தந்தியில் வருமே அந்த மாதிரி அழகி இல்லை, உண்மையிலேயே அழகிகள் தான் ( ஹையா...! நான் மருத்துவர். மாத்ருபூதம் போன்ற பிற மருத்துவர்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை).

பஞ்சரான பேருந்தின் பாசஞ்சராப் போய் பஞ்சரான கதைகளை கேள்விப்படும் போதும்,

'மேட் இன் இந்தியா' அழகி திரிஷாவாகட்டும் அல்லது "மேட் இன் இந்தியா" என்று பாடி திரிகிற அலிசா ஆகட்டும், அவர்களை பற்றி ஏதாவது ஒரு செய்தி படிக்கும் போதும்,

வீட்டில் தொல்லைப் படுத்தும்..... தங்கமணி இல்லைங்க, தங்கமணியையே போக்கு காட்டும் மவுசு ( ஆண்டவா அடுத்த பெறவிலே நான் மவுசாகவோ, கரப்பானாகவோ பொறக்க வேண்டும்), அந்த தங்கமணியையும் எப்பவாவது எனது அறிவு திறத்தால்( ! ), போக்கு காட்டி விட்டு நான் நைசாக நெட்‌டு பக்கம் வந்தால் (சத்தியமா பதிவு பக்கம் தான்) என்னையே டபாய்க்கும் மவுசு...

இப்படி எதை பார்த்தாலும் பதிவு எழுது, பதிவு எழுது என்று இழுக்கிறதே,

போக வேண்டிய இடம் எக்மோர் என்று இருக்கும், கையிலே நாலு ரூபாயும் இருக்கும், டிக்கட் எடுக்கும் போது.. "ஒரு கோல்ட் கிங்ஸ்" என்று சொல்ல வந்து பின்னர், "ஒரு எக்மோரே" என்று சொல்லுவோமே அதை போல, எதை பார்த்தாலும் பதிவுக்கான செய்தியாக மனதில் வந்து, பின்னே சாதாரண நிகழ்வாகிறதே,

இதுக்கு பேரு தான் பதிவுப் போதையா? எனக்கு மட்டும் தான் இப்படியா...? இல்லை, எல்லாருக்குமே இப்படி தானா...?

நன்றி.

மீண்டும் வருக,

நானும் வருவேன்...

Friday, January 2, 2009

கூட்ஸ் வண்டி - ஓர் அறிமுகம்.

வண்டிகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் நான் ஒரு தனி விதம். எனக்கென்று தனியாக எதுவும் கிடையாது, இதுவே எனது தனிச் சிறப்பு ஆகும். எனக்கென்று தனியே ஒரு வழித்தடமோ, குறியீட்டு எண்னோ கிடையாது. நான் இன்ன பொருளை தான் ஏற்றி செல்ல வேண்டும் என்ற வரை முறையோ கிடையாது. எனக்கான வேகமும் சிறப்பித்து கூறும்படி இல்லை. சிறப்பித்து கூறுவாரும் இல்லை. இருப்பினும் நான் எனது கடமையை செய்கிறேன். செய்து கொண்டே இருப்பேன்.

கூட்ஸ் வண்டியில் வராத பொருள் இல்லை, இதற்கு கல்லும் ஒன்றுதான் வைரமும் ஒன்றுதான். கூட்ஸ் வண்டி பயணிக்கும் பாதைகளும் அதனால் தீர்மானிக்கப்படுவதில்லை. இது அநேக விரைவு பயணிகளுக்கு வழி விட்டே ஒதுங்கி நிற்கும்.

இது எந்த பொழுதிலும் முதல் பெட்டி கொண்டதை ஒருவாராகவும் வேறு பெட்டியில் உள்ளதை ஒருவாராகவும் கருதியது இல்லை. சுருங்க சொன்னால் கூட்ஸ் வண்டிக்கு வகுப்பு பேதம் பிடிக்காது.

இந்த கூட்ஸ் வண்டி தங்களுக்கு தேவையான அனைத்தையும் சுமந்து வரும். இதற்கு தெரியாது அது குப்பையா, மாணிக்கமா என்று. ஆகவே தங்களின் மனம் போன போக்கில் தங்களுக்கு தேவையானதை எடுத்து அதற்கு கூலியாய் உங்கள் கருத்தை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நம்மில் பலர் பல வண்டிகளில் பயணம் செய்திருப்பார்கள், ஆனால் கூட்ஸ் வண்டியில் பயணம் செய்திருப்பவர்கள் மிகச்சிலரே. ஆகையினால் இந்த
கூட்ஸ் வண்டி பயணம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவத்தையே தரும்.

நன்றி

மீண்டும் வருக.

Tuesday, December 30, 2008

Test

Test